கேரள எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொடூரம்; குடிபோதையில் பெண்களை உதைத்து வெளியே தள்ளிய நபர்

திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்,
புதுடெல்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற கேரள எக்ஸ்பிரஸ் ரெயில், கேரளாவின் வர்கலா ரெயில் நிலையத்திற்கு நேற்றிரவு வந்து சேர்ந்தது. இதன்பின்னர் இரவு 8.30 மணியளவில் வர்கலா ரெயில் நிலையத்தில் இருந்து அந்த ரெயில் புறப்பட்டு சென்றது.
அப்போது பொது பெட்டியில் ஆலுவா பகுதியில் 2 பெண்கள் ஏறியுள்ளனர். அவர்கள் கழிவறைக்கு சென்று விட்டு வெளியே வந்தனர். அப்போது, சுரேஷ் குமார் என்பவர் ரெயிலின் கதவு அருகே நின்று கொண்டு இருந்துள்ளார். அவர் திடீரென அவர்களை கடுமையாக தாக்க தொடங்கினார்.
2 பேரையும் காலால் உதைத்தும், மிதித்தும் ரெயிலில் இருந்து கீழே தள்ளியுள்ளார். இதில் பெண் ஒருவர் கீழே விழுந்து விட்டார். அவர் ரெயில் தண்டவாளத்தில் படுகாயங்களுடன் கிடந்துள்ளார். மற்றொரு பெண் ரெயில் கதவை பிடித்து தொங்கியபடி இருந்துள்ளார். சம்பவம் பற்றி அறிந்ததும் ரெயில்வே போலீசார் சுரேஷை பிடித்து கொச்சுவேலி நிலையத்தில் உள்ள ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர்.
வர்கலா ரெயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் தண்டவாளத்தில் கிடந்த பெண் பயணியை போலீசார் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதன்பின்னர், திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரிக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுரேஷ் திருவனந்தபுரம் நகரின் வெள்ளரதம் பகுதியை சேர்ந்தவர். கோட்டயம் நகரில் ரெயிலில் ஏறிய அவர் குடிபோதையில் இருந்துள்ளார். அவரை மருத்துவ பரிசோதனைக்காக போர்ட் மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.






