டெல்லி கார் வெடிப்பு விவகாரம்: உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் ஆலோசனை

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்திருந்தார்.
டெல்லி கார் வெடிப்பு விவகாரம்: உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் ஆலோசனை
Published on

புதுடெல்லி,

டெல்லி சம்பவம் தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று கூறுகையில், டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் போக்குவரத்து சிக்னலில் ஹூண்டாய் ஐ20 காரில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிப்பில் சில பாதசாரிகள் காயமடைந்தனர். சில வாகனங்கள் சேதமடைந்தன. சிலர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெடிப்பு பற்றிய தகவல் கிடைத்த 10 நிமிடங்களில், டெல்லி குற்றப்பிரிவு மற்றும் டெல்லி சிறப்புப் பிரிவின் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். தேசிய பாதுகாப்பு படை மற்றும் தேசிய புலனாய்வு முகமை குழுக்கள் தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து, முழுமையான விசாரணையை தொடங்கியுள்ளன. மேலும் அருகில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. டெல்லி போலீஸ் கமிஷனர் மற்றும் சிறப்புப் பிரிவு பொறுப்பு அதிகாரியிடமும் பேசினேன். அவர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர். நாங்கள் அனைத்தையும் ஆராய்ந்து வருகிறோம். மேலும் அனைத்து விஷயங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு முழுமையான விசாரணையை மேற்கொள்வோம். முடிவுகளை பொதுமக்களுக்கு வழங்குவோம். நான் சம்பவ இடத்துக்கும், மருத்துவமனைக்கும் செல்கிறேன் என்று அவர் கூறி இருந்தார். இதனையடுத்து டெல்லி ஆஸ்பத்திரிக்கு சென்ற அமித்ஷா, அங்கு சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்தார்.

இந்நிலையில் டெல்லி கார் குண்டுவெடிப்பு விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. டெல்லி காவல் ஆணையர், என்ஐஏ, தேசிய பாதுகாப்புப்படை அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக டெல்லி போலீசார் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் எப்ஐஆர் பதிவு செய்து, பரிதாபாத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பயங்கரவாத தொகுதியுடன் தொடர்பு இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன. இதுதொடர்பாக டெல்லியில் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சூழலில் டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com