ஈரான் தாக்குதலின் போது இந்திய வான்வெளியை அமெரிக்கா பயன்படுத்தியதா? மத்திய அரசு விளக்கம்

Photo Credit: AP
ஈரான் மீதான தாக்குதலின் போது இந்திய வான்வெளியை அமெரிக்கா பயன்படுத்தவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது.
புதுடெல்லி,
ஈரான் அணு ஆயுதங்கள் இஸ்ரேலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறும் எனக்கூறி இஸ்ரேல் கடந்த 13-ந் தேதி திடீரென மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் இந்த அதிரடிக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த 11 நாட்களாக நடந்து வரும் இந்த மோதல்களால் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஈரானை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்தது. ஆனால் இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வரும் நிலையில், அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பலன் அளிக்காது எனக்கூறி ஈரான் ஒதுங்கி விட்டது. இதை தொடர்ந்து அமெரிக்கா 'மிட்நைட் ஹாமர்' என்று பெயரில் ஈரான் மீது நேரடியாக தாக்குதல் தொடுத்தது. இந்நிலையில் ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்த அமெரிக்கா இந்தியாவின் வான்வெளியை பயன்படுத்தியதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. ஆனால் இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.