டெல்லி கார் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது டாக்டர் உமர்: டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி


டெல்லி கார் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது டாக்டர் உமர்: டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி
x
Lingavel Murugan M 13 Nov 2025 9:15 AM IST (Updated: 13 Nov 2025 9:18 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை தீவிரமாக விசாரித்து வருகிறது.

டெல்லி,

டெல்லி செங்கோட்டை எதிரே கடந்த 10-ந் தேதி இரவு, வெடிபொருளை மறைத்து எடுத்துச்சென்ற கார் வெடித்துச் சிதறியது. இதில் 13 பேர் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாட்டையே உலுக்கிய டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) தீவிரமாக விசாரித்து வருகிறது. சம்பவ இடத்திற்கு அதிகாரிகளும், தடயவியல் சோதனை நிபுணர்களும் சென்று அங்குலம் அங்குலமாக தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்த விசாரணைக்காக 10 பேர் கொண்ட சிறப்புக்குழுவை அமைத்துள்ளது. போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதற்கு மேலான பதவிகளில் உள்ள அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்த குழு செயல்பட இருக்கிறது. இந்த சிறப்புக்குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

போலீசார் இது தொடர்பாக நடத்திய விசாரணையில் பயங்கரவாத கும்பலுடன் தொடர்புடைய மருத்துவக்குழு நாட்டில் பல இடங்களில் குறிப்பாக டெல்லியில் நாசவேலையை நடத்த திட்டமிட்டு இருப்பது கண்டறியப்பட்டது. பயங்கரவாத டாக்டர் குழுவில் இணைந்திருந்த உமர் முகமது, தான் விலைக்கு வாங்கிய ஹூண்டாய் ஐ-20 காரில் வெடிபொருட்களை எடுத்துச் சென்று செங்கோட்டை அருகே வெடிக்கச் செய்துள்ளார்.

கார் வெடிப்பு சம்பவத்தில் உமர் முகமது தற்கொலை குண்டாக வெடித்திருப்பார் என கருதப்படுவதால் கார் மற்றும் வெடிப்பு பகுதியில் கிடந்த சதைப்பகுதிகளை எடுத்து, அதை உமர் முகமதுவின் தாயார் டி.என்.ஏ.வுடன் ஒப்பிட நடவடிக்கைககள் எடுக்கப்பட்டன. உமர் முகமது தாயாரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொடுக்கப்பட்டு உள்ளது. அங்கு ஒப்பீட்டு பரிசோதனை நடந்து வந்தது.

இந்த நிலையில், டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில், காரை ஓட்டியது மருத்துவர் உமர் முகமது தான் என்பது டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. அவரின் தாயிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியும், காரில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியும் 100 சதவீதம் ஒத்துப்போனதையடுத்து உமர் முகமது தற்கொலை குண்டாக வெடித்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து உமர் நபிக்கு சொந்தமான மற்றொரு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.

8 பேர் 4 நகரங்களில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்ட‌து புலனாய்வுத்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலா 2 பேர் கொண்ட குழுவாக 4 நகரங்களில் குண்டு வெடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், ஒவ்வொரு குழுவும் பல IED குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

1 More update

Next Story