நிலநடுக்க பாதிப்பு; மியான்மர் ராணுவ ஜெனரலிடம் பேசிய பிரதமர் மோடி


நிலநடுக்க பாதிப்பு; மியான்மர் ராணுவ ஜெனரலிடம் பேசிய பிரதமர் மோடி
x

மியான்மர் நாட்டின் ராணுவ ஜெனரலிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

புதுடெல்லி,

மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவான நிலையில், நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் மியான்மரில் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. அதே சமயம், மீட்புப் பணிகள் தற்போது துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மியான்மர் அரசின் தலைவரும், ராணுவ ஜெனரலுமான மின் ஆங் ஹிலாங்கிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார். இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததாகவும், இந்த கடினமான நேரத்தில் மியான்மர் மக்களுக்கு இந்தியா உறுதுணையாக நிற்கும் என்றும் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும் 'ஆபரேஷன் பிரம்மா' மூலம் இந்தியா சார்பில் மியான்மர் மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள், மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதன்படி மியான்மருக்கு இதுவரை சுமார் 15 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story