ஜி.எஸ்.டி. குறைப்பின் பலன் நுகர்வோரை சென்றடைவது கேள்விக்குறி; காங்கிரஸ் கருத்து

ஜி.எஸ்.டி. குறைப்பின் பலன் மக்களை சென்றடையுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருப்பதாக ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்த நிலையில், ஜி.எஸ்.டி. குறைப்பின் பலன் மக்களை சென்றடையுமா? என்பது கேள்விக்குறியாக இருப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘ஜி.எஸ்.டி. விகிதக் குறைப்பு நுகர்வோரின் விலைகளைக் குறைக்க வழிவகுத்ததா என்பதைக் கண்காணிக்க, மத்திய சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம், 2017-ன் பிரிவு 171-ன் கீழ் தேசிய லாபநோக்க எதிர்ப்பு ஆணையம் நிறுவப்பட்டது. ஆனால், 2024 செப்டம்பர் 30-ந்தேதி மோடி அரசு வெளியிட்ட அறிவிப்பின் மூலம் அது ‘‘பற்கள் இல்லாததாக’’ மாற்றப்பட்டது’ என குற்றம் சாட்டினார்.
எனவே இந்த ஜி.எஸ்.டி. குறைப்பின் பலன் மக்களை சென்றடையுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருப்பதாக கூறிய ஜெய்ராம் ரமேஷ், ஜி.எஸ்.டி. குறைப்பின் பலன்கள் மக்களுக்கு கிடைக்காத நிலையில், இதுவும் ஒருபுறம் வாக்கு திருட்டு போலவும் மறுபுறம் லாபம் தேடுதலாகவும் இருக்கக்கூடாது என தெரிவித்தார்.






