போர்ச்சுகலுக்கு செல்ல முயன்ற குஜராத் தம்பதி லிபியாவில் கடத்தல்

கோப்புப்படம்
போர்ச்சுகலுக்கு குடிபெயர முயன்ற குஜராத் தம்பதியர் மற்றும் குழந்தை லிபியாவில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
ஆமதாபாத்,
குஜராத்தின் மெஹன்சாவை சேர்ந்தவர் கிஸ்மட்சின் சவ்தா. திருமணமான இவர் மனைவி ஹீனாபென் மற்றும் 2 வயது மகள் தேவன்ஷியுடன் குஜராத்தில் வசித்து வந்தார். சவ்தாவின் சகோதரர் ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். இதனால் போர்ச்சுகலுக்கு சட்டவிரோதமாக சென்று அங்கு அகதிகளாக வசிக்க சவ்தா முடிவு செய்தார்.
இதற்காக தனது குடும்பத்துடன் துபாய்க்கு விமானத்தில் சென்று அங்கிருந்து லிபியா வழியாக போர்ச்சுகலுக்குள் நுழைய முடிவு செய்தனர். துபாயில் இருந்து லிபியா சென்ற அவர்களை மர்மகும்பல் ஒன்று கடத்தியது. மேலும் அவர்களை விடுவிக்க ரூ.2 கோடி கேட்டு சவ்தாவின் சகோதரனிடம் தெரிவித்தது. இதுகுறித்து லிபியா மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் சவ்தாவின் சகோதரர் தொலைபேசியில் புகார் அளித்தார். இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரித்து அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
முன்னதாக கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில், ஆஸ்திரேலியாவுக்கு சென்று கொண்டிருந்த, இந்தியாவை சேர்ந்த ஒரு தம்பதி உட்பட நான்கு பேர் ஈரானில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் அங்கு சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தநிலையில், இந்திய அரசாங்கத்தின் தலையீட்டைத் தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






