குஜராத் விமான விபத்து; பயணிகளில் 169 பேர் இந்தியர்கள் - 'ஏர் இந்தியா' தகவல்


குஜராத் விமான விபத்து; பயணிகளில் 169 பேர் இந்தியர்கள் - ஏர் இந்தியா தகவல்
x
தினத்தந்தி 12 Jun 2025 3:50 PM IST (Updated: 12 Jun 2025 4:08 PM IST)
t-max-icont-min-icon

புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது என்பதை 'ஏர் இந்தியா' நிறுவனம் உறுதி செய்துள்ளது.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமானம் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது.

அந்த விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர். விமானம் விழுந்து தீப்பிடித்த நிலையில், அந்த இடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து 'ஏர் இந்தியா' நிறுவனம் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், இதை விபத்து என்று குறிப்பிடாமல் 'சம்பவம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் இது விபத்தா? அல்லது சதி செயலா? என்ற சந்தேகம் கிளம்பியது. இந்த நிலையில், மற்றொரு பதிவு மூலம் இது ஒரு விபத்து என்பதை 'ஏர் இந்தியா' உறுதி செய்துள்ளது. அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட AI171 விமானம் இன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியுள்ளது என்பதை 'ஏர் இந்தியா' உறுதி செய்கிறது.

அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.38 மணிக்கு புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில், பயணிகள், விமான பணியாளர்கள் உள்பட மொத்தம் 242 பேர் இருந்தனர். விமானத்தில் இருந்த பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் இங்கிலாந்து நாட்டவர்கள், கனடாவை சேர்ந்தவர் ஒருவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். மேலும் தகவல்களை பெற 1800 5691 444 என்ற பயணிகளுக்கான பிரத்யேக அவசர எண் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்கும் அதிகாரிகளுக்கு 'ஏர் இந்தியா' முழு ஒத்துழைப்பையும் வழங்கும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story