குஜராத் விமான விபத்து; அமித்ஷா நேரில் ஆய்வு

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமித்ஷா அகமதாபாத் புறப்பட்டுச் சென்றார்.
காந்திநகர்,
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் போயிங் 787-8 டிரீம்லைனர் விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர்.
இதுவரை வெளியான தகவலின்படி, இந்த கோர விபத்தில் 204 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விமானம் விழுந்த பகுதியில் மருத்துவ கல்லூரி மாணவர்களின் விடுதி அமைந்துள்ள நிலையில், இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குஜராத் சுகாதாரத்துறை செயலாளர் தனஞ்செய் திவேதி தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த விமான விபத்து குறித்து குஜராத் முதல்-மந்திரி, உள்துறை மந்திரி மற்றும் காவல்துறை ஆணையரிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார். மீட்பு பணிகளுக்கு மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அவர் உறுதியளித்தார்.
தொடர்ந்து டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமித்ஷா அகமதாபாத் புறப்பட்டுச் சென்றார். பின்னர் அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்திற்கு அமித்ஷா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல், சிவில் விமான போக்குவரத்து மந்திரி ராம் மோகன் நாயுடு, சிவில் விமான போக்குவரத்து இணை மந்திரி முரளிதர் மொகோல் மற்றும் குஜராத் உள்துறை மந்திரி ஹர்ஷ் சங்கவி ஆகியோர் உடன் இருந்தனர்.






