ஜம்மு-காஷ்மீரில் வரலாறு காணாத மழை; பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு

கனமழை தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக, ஜம்முவில் வரலாறு காணாத கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் ஜம்முவில் 380 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 1910ம் ஆண்டுக்குப்பின் ஜம்முவில் 24 மணிநேரத்தில் பதிவான அதிகபட்ச மழை இதுவாகும். கனமழை காராணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். கனமழை தொடர்ந்து பெய்துவருவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர், ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். கனமழை தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






