குடும்ப தகராறில் இளம்பெண்ணை அடித்துக்கொன்ற கணவர் கைது

குடும்ப தகராறில் இளம்பெண்ணை அடித்துக்கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண்ணா அருகே ஆனமங்காடு பகுதியை சேர்ந்தவர் உண்ணிகிருஷ்ணன். இவரது மகள் வைஷ்ணவி(வயது 26). இவருக்கும், பாலக்காடு மாவட்டம் ஸ்ரீகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த தீக் ஷித்(26) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வைஷ்ணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி தீக் ஷித் மாங்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் வைஷ்ணவி மயங்கிய நிலையில் இருந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஸ்ரீகிருஷ்ணபுரம் போலீசார் தீக் ஷித்தை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.அதில் அவர் குடும்ப தகராறில் வைஷ்ணவியை அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தீக் ஷித்தை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






