ஓடுபாதையில் உரசிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி: பயணிகள் அதிர்ச்சி


ஓடுபாதையில் உரசிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி: பயணிகள் அதிர்ச்சி
x

சிறிது நேரம் கழித்து விமானம் மீண்டும் பத்திரமாக தரையிறக்கப்பட்டது

மும்பை,

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் வந்தது. ஏர்பஸ் ஏ 321 ரகத்தை சேர்ந்த இந்த விமானம் தரையிறங்கும் போது வால் பகுதி உரசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மும்பையில் கனமழை பெய்து வரும் நிலையில், மோசமான வானிலை நிலவியதால் தாழ்வான உயரத்தில் விமானம் பறந்து வந்தது. தொடர்ந்து விமானத்தை விமானி, தரையிறக்க முயன்றார். அப்போது விமானத்தின் வால்பகுதி ஒடுபாதையில் உரசியது. இதையடுத்து மீண்டும் விமானம் டேக் ஆப் செய்து சென்றது. சிறிது நேரம் கழித்து விமானம் மீண்டும் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானி சாமர்த்தியமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் மும்பை விமான நிலையத்தில் பயணிகள் இடையே சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இண்டிகோ விமான நிறுவனம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் ஏ321 விமானம் தரையிறங்கும் போது ஓடு பாதையில் வால் பகுதி உரசியது. இதையடுத்து, மறு முயற்சியில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. வழிகாட்டு நெறிமுறைகளின் படி உரிய பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகளின் பாதுகாப்பிற்கே இண்டிகோ நிறுவனம் எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story