கர்நாடக மாநில பா.ஜனதா மகளிர் அணி பொதுச்செயலாளர் தற்கொலை- உருக்கமான கடிதம் சிக்கியது


கர்நாடக மாநில பா.ஜனதா மகளிர் அணி பொதுச்செயலாளர் தற்கொலை- உருக்கமான கடிதம் சிக்கியது
x

பா.ஜனதா மகளிர் அணி பொதுச்செயலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு

கர்நாடக மாநிலம் பெங்களூரு யஸ்வந்த்புரத்தை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 42). இவர் கர்நாடக மாநிலம் பா.ஜனதா மகளிர் அணியின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். மேலும் கட்சி பணியில் அவர் திறமையாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது கணவர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதையடுத்து அவர் கட்சி பணியில் ஈடுபடாமல் விலகி இருந்தார்.

இந்தநிலையில் மதியம் வீட்டில் தனியாக இருந்த மஞ்சுளா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து யஸ்வந்த்புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த போலீசார் மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எம்.எஸ்.ராமையா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மஞ்சுளா கைப்பட எழுதிய கடிதம் போலீசாருக்கு கிடைத்தது. அதில் வாழ்க்கையில் பணம், பெயர், புகழ் ஆகியவை தான் முக்கியம் என்று நினைக்கிறோம். ஆனால் அது உண்மை இல்லை. நான் பணம், பெயர், புகழ் சம்பாதித்துவிட்டேன். ஆனால் நிம்மதி இல்லை. கடந்த சில நாட்களாக நான் நிம்மதி இழந்து தவிக்கிறேன் எனது தற்கொலைக்கு வேறு யாரும் காரணம் இல்லை.எனது தற்கொலைக்கு நான் தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த கடித்தை கைப்பற்றிய போலீசார் அதை தடயவியல் ஆய்வு அறிக்கைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.


Next Story