கர்நாடகா சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏக்கள் கடும் அமளி: மசோதாவின் நகல்கள் கிழிப்பு


கர்நாடகா சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏக்கள் கடும் அமளி: மசோதாவின் நகல்கள் கிழிப்பு
x
தினத்தந்தி 21 March 2025 2:58 PM IST (Updated: 21 March 2025 6:06 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகா சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையில் பரபரப்பான சூழல் நிலவியது.

பெங்களூரு,

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக சித்தராமையா உள்ளார். அங்கு பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. கர்நாடகாவில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 7 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது அவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதனால், அவையில் தினமும் காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, பட்ஜெட்டில் சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள்,கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கு மத்தியில், அரசியல் தலைவர்களை ஹனி டிராப் மூலம் சிக்க வைக்க முயற்சி நடைபெறுவதாக ஆளும் கட்சி மந்திரியே எழுப்பிய விவகாரம் அவையிலும் எதிரொலித்துள்ளது. இது தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா கூறிய போதிலும் அவையில் அமளி நீடித்து வருகிறது.

இந்த பரபரப்புக்கு மத்தியில், இன்று சட்டசபையில் நிதி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை, பொதுப்பணி ஒப்பந்தத்தில் சிறுபான்மையினருக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா என தவறாக கருதிய பாஜக எம்.எல்.ஏக்கள், மசோதாவின் நகலை கிழித்து அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்த பாஜக எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர் இதனால் அவையில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

1 More update

Next Story