கர்நாடகா: சிக்கமகளூருவில் நக்சலைட்டுகள் நடமாட்டம்; மலைப்பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து


கர்நாடகா: சிக்கமகளூருவில் நக்சலைட்டுகள் நடமாட்டம்; மலைப்பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து
x

நக்சலைட்டுகள் நடமாட்டம் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ளதால் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

சிக்கமகளூரு,

கர்நாடகத்தின் மலைநாடு மாவட்டமான சிக்கமகளூருவில் சிருங்கேரி, கொப்பா ஆகிய பகுதிகள் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள பகுதிகளாகும். இந்தநிலையில், கொப்பா தாலுகா அருகே உள்ள கடைகுந்தி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பேகவுடா. இவருக்கு சொந்தமான பண்ணை தோட்டம் அப்பகுதியில் உள்ளது.

இந்தநிலையில், இவரது தோட்டத்துக்கு நக்சலைட்டுகள் 2 பேர் வந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளனர். இதையடுத்து அவர்கள் சுப்பேகவுடா வீட்டில் சாப்பிட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். அப்போது அவர்கள் 3 துப்பாக்கிகளை அங்கேயே விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயபுரா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த 3 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து சுப்பேகவுடாவின் வீட்டுக்கு வந்து சென்றதாக முண்டகாரு கிராமத்தை சேர்ந்த நக்சலைட்டுகளான லதா மற்றும் ஜெயண்ணா ஆகியோர் மீது ஜெயபுரா போலீசார் 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் நக்சலைட்டுகள் நடமாட்டம் கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ளதால் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் சிருங்கேரி, கொப்பா ஆகிய தாலுகாக்களின் மலைப்பகுதியில் நக்சலைட்டு ஒழிப்புப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் மலைநாடு பகுதியில் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story