கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தவெக நிர்வாகிகள், போலீஸ் அதிகாரிகள் ஒரே நாளில் விசாரணைக்கு ஆஜர்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக 5 மணி நேரத்திற்கும் மேலாக ஆதவ் அர்ஜுனா, புஸ்சி ஆனந்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுடெல்லி,
கரூரில் நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே கரூரில் த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் நிர்வாகிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், விசாரணைக்காக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று ஆஜராகும்படி த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணைப் பொதுச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார் ஆகியோருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது. இதனைத் தொடர்ந்து புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சி.டி. நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் இன்று காலை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்கள். த.வெ.க. முக்கிய நிர்வாகிகளான இந்த 4 பேரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு விளக்கங்களை கேட்டு விசாரணை நடத்தி பதிவு செய்தனர்.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீடு நேற்று முன்தினம் மலேசியாவில் நடைபெற்றது. அந்த விழாவில் இந்த 3 பேரும் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில், சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகுவதற்காக புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சி.டி. நிர்மல் குமார் ஆகியோர் மலேசியாவில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்று, இன்று காலை சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர்.
ஆஜரான இந்த 4 பேரிடமும் கூட்ட அனுமதி, அமைப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் இரண்டாவது முறையாக இன்று விசாரணை நடத்தியுள்ளனர். அதேநேரத்தில், கரூர் எஸ்.பி ஜோஷ் தங்கையா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்த், டிஎஸ்பி செல்வராஜ், காவல் ஆய்வாளர் மணிவண்னன் ஆகியோரும் டெல்லி சிபிஐ முன்பு ஆஜராகியுள்ளனர். இரு தரப்பிடமும் 5 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






