மதுபானம் கொடுத்து சிறுமிக்கு நடந்த கொடுமை.. தாய், கள்ளக்காதலனுக்கு 180 ஆண்டுகள் சிறை

சிறுமியின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனுக்கு 180 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
மலப்புரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த 33 வயது பெண்ணுக்கு 12 வயதில் மகள் உள்ளாள். சிறுமியின் தாய்க்கும், பாலக்காட்டை சேர்ந்த 36 வயதான நபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது. பின்னர் அந்த பெண் தனது கணவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் வசித்து வந்தார். அப்போது 12 வயது சிறுமியை மிரட்டி தாயின் கள்ளக்காதலன் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. ஓராண்டாக சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சிறுமிக்கு மதுபானம் கொடுத்தும், ஆபாச படங்களை காண்பித்தும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளார்.
இந்த சம்பவத்துக்கு சிறுமியின் தாய் உடந்தையாக இருந்து உள்ளார். மேலும் இதுபற்றி வெளியில் யாரிடமும் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக சிறுமியை தாய், அவரது கள்ளக்காதலன் மிரட்டி உள்ளனர். இதையடுத்து சிறுமி பள்ளிக்கு சென்றபோது, தனக்கு நேர்ந்தது பற்றி ஆசிரியையிடம் கூறினாள். இதுகுறித்து சைல்டு லைன் மூலம் மலப்புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மஞ்சேரி போக்சோ கோர்ட்டில் நடைபெற்றது. 33 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அஷ்ரப், போக்சோ உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறுமியின் தாய், அவரது கள்ளக்காதலனுக்கு தலா 180 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.11.75 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பின்னர் 2 பேரும் தவனூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.






