பா.ஜனதா- சிவசேனா திடீர் மோதல்: மராட்டிய அரசியலில் பரபரப்பு

பா.ஜனதா- சிவசேனா இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. மந்திரி சபை கூட்டத்தை சிவசேனா மந்திரிகள் புறக்கணித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
பா.ஜனதா- சிவசேனா திடீர் மோதல்: மராட்டிய அரசியலில் பரபரப்பு
Published on

மும்பை,

மராட்டியத்தில் பா.ஜனதா தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மகாயுதி கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றன. நேற்று கல்யாண் - டோம்பிவிலியை சோந்த சிவசேனா முன்னாள் கவன்சிலர்கள் சிலர் மாநில தலைவர் ரவீந்திர சவான் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தனர்.

இந்தநிலையில் நேற்று வாராந்திர மந்திரி சபை கூட்டம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் மந்திராலயாவில் நடந்தது. கூட்டத்தில் சிவசேனா தரப்பில் துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மட்டுமே கலந்து கொண்டார். சிவசேனா மந்திரிகள் யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சிவசேனா மந்திரிகள் மந்திரி சபை கூட்டத்தை புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மகாயுதி கூட்டணியில் மோதல் ஏற்பட்டதாக எதிர்க்கட்சியினர் கூறினர்.

இந்தநிலையில் மந்திரி சபை கூட்டம் முடிந்த பிறகு சிவசேனா மந்திரிகள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை அவரது அறையில் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் கல்யாண் - டோம்பிவிலியில் சிவசேனாவை சேர்ந்தவர்கள் பா.ஜனதாவில் சேர்க்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உல்லாஸ்நகரில் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் தான் முதலில் சிவசேனாவில் சேர்க்கப்பட்டதாக தெரிவித்து உள்ளார்.

மேலும் அவர், `நீங்கள் பா.ஜனதாவினரை உங்கள் கட்சியில் சேர்க்கும் போது, பா.ஜனதா உங்கள் கட்சியினரை சேர்த்தால், நீங்கள் அதுகுறித்து புகார் அளிக்க கூடாது' என சிவசேனா மந்திரிகளிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முடிவில் யாரும் கூட்டணியில் உள்ள கட்சியினரை தங்கள் கட்சிக்கு இழுக்க வேண்டாம் என தேவேந்திர பட்னாவிஸ் சிவசேனா மந்திரிகளிடம் கூறியதாக கூறப்படுகிறது. ஆளும் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் மந்திரிசபை வரை எதிரொலித்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com