ஜெயிலில் இருந்து வீட்டிற்கு செல்ல பைக்கை திருடிய ஆசாமி கைது

ஜெயிலில் இருந்து வெளியே வந்த ஆசாமி வீட்டுக்கு செல்வதற்காக வாகனம் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் பாபுராஜ் என்ற சோடா பாபு (வயது 54). இவர் மீது ஏராளமான திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு திருட்டு வழக்கில் கண்ணூர் போலீசார் கைது செய்தனர். அந்த வழக்கில் தண்டனை பெற்ற அவர் கண்ணூர் மத்திய ஜெயலில் அடைக்கப்பட்டிருந்தார். தண்டனை காலம் முடிந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர், வீட்டுக்கு செல்வதற்காக வாகனம் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் சாலையோரம் நின்று கொண்டிருந்த சனுஜ் என்பவரின் பைக்கை திருடிக்கொண்டு வீட்டுக்கு சென்றார்.
சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தன்னுடைய பைக் திருடு போனது குறித்து போலீசில் சனுஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பைக்கை திருடியது யார்? என்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த வீடியோவை ஆய்வு செய்தனர். அப்போது பைக்கை திருடியது ஏராளமான திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பாபுராஜ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த சனுஜின் பைக்கை பறிதல் செய்யப்பட்டது.






