வழக்கு விசாரணையின்போது நீதிபதி மீது செருப்பு வீசிய நபர் - அதிர்ச்சி சம்பவம்


வழக்கு விசாரணையின்போது நீதிபதி மீது செருப்பு வீசிய நபர் - அதிர்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 15 Oct 2025 2:01 PM IST (Updated: 15 Oct 2025 5:11 PM IST)
t-max-icont-min-icon

1997ம் ஆண்டு பதியப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றது

காந்தி நகர்,

1997ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோமித்பூர் பகுதியை சேர்ந்த நபர் காய்கறி வாங்க தனது வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். கடை வீதியில் காய்கறி வாங்கிக்கொண்டிருந்தபோது அங்கு இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, இளைஞர் அடித்த பந்து காய்கறி வாங்கிக்கொண்டிருந்த அவரை தாக்கியது. இதனால், அந்த நபருக்கும் இளைஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக அந்த நபர் தன்னுடன் மோதலில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் தொடர்பான வழக்கில் 2009ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அகமதாபாத்தில் உள்ள கீழமை கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து இந்த வழக்கில் இருந்து 4 இளைஞர்களையும் விடுவித்து 2017ம் ஆண்டு கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அதே ஆண்டு அகமதாபாத் செசன்ஸ் கோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை அகமதாபாத் செசன்ஸ் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, 4 இளைஞர்களையும் வழக்கில் இருந்து விடுதலை செய்த கீழமை கோர்ட்டின் உத்தரவை உறுதி செய்தது. இதனால் ஆத்திரமடைந்த மனுதாரர் விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி நீதிபதி மீது வீசி அவரை தாக்க முற்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், வழக்கறிஞர்கள் அந்த நபரை கோர்ட்டில் இருந்து வெளியேற்றினர். இந்த சம்பவம் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story