மருமகனை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய மாமியார் - அதிர்ச்சி சம்பவம்

இரவு முழுவதும் ஜலந்தரை மின்கம்பத்தில் கட்டி வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜலந்தர் பாலியர் சிங். இவரது மனைவி சுபத்ரா மல்பிசோ. இதனிடையே, கடந்த ஆண்டு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சுபத்ராவை ஜலந்தர் கடுமையாக தாக்கியுள்ளார்.
இது குறித்து கிராம தலைவர்களிடம் முறையிடப்பட்டது. இதையடுத்து, சுபத்ரா அவரது தாயார் வீட்டில் சில மாதங்கள் இருக்கும்படி கிராம தலைவர்கள் அறிவுறுத்தனர். இதனால், சுபத்ரா தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். அதேபோல், ஜலந்தர் மீது குடும்பநல கோர்ட்டில் சுபத்ரா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த வியாழக்கிமழை இரவு ஜலந்தர் தனது மாமியார் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஜலந்தருக்கும், அவரது மாமியாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஜலந்தரை அவரது மாமியார், மனைவி சுபத்ரா மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் ஜலந்தரை கட்டி வைத்து சுபத்ராவும் அவரது தாயார் மற்றும் குடும்ப உறவினர்கள் கடுமையாக தாக்கினர். மேலும், வியாழக்கிழமை இரவு முழுவதும் ஜலந்தரை மின்கம்பத்தில் கட்டி வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஜலந்தரை மீட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜலந்தரின் மனைவி சுபத்ரா, மாமியார், உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






