மராட்டியம்: மனைவியை பிரித்த சந்தேகத்தில் மாமியாரை தீ வைத்து எரித்த மருமகன் பலி

மராட்டியத்தில் மனைவியை தன்னிடம் இருந்து பிரித்து விட்டார் என்ற சந்தேகத்தில் மாமியாரை தீ வைத்து எரித்த மருமகன் தீக்காயங்கள் ஏற்பட்டு பலியானார்.
புனே,
மராட்டியத்தில் முலுண்டு நகரில் வசித்து வந்தவர் கிருஷ்ண தாஜி அஷ்தாங்கர் (வயது 56). இவருடைய மாமியார் பாபி தாஜி உசாரே (வயது 72). கிருஷ்ண தாஜி டெம்போ ஓட்டுநராக பணி செய்து வந்திருக்கிறார். இவருடைய மனைவி 6 மாதங்களுக்கு முன்னர், கணவரை பிரிந்து சென்று விட்டார்.
போரிவலி பகுதியில் உள்ள நோயாளி ஒருவரை கவனித்து கொள்வதுடன் அவருடனேயே தங்கி விட்டார். மனைவி திரும்பி வராத சோகத்தில், டெம்போவிலேயே கிருஷ்ண தாஜி வசித்து வந்திருக்கிறார். அவருடைய மகன் மற்றும் திருமணம் முடிந்த மகளும் கூட அவருடன் இல்லாமல் வேறு இடத்தில் வசித்து வந்துள்ளனர்.
குடிபோதைக்கு அடிமையான கிருஷ்ண தாஜி, தனிமையாக வசித்து வந்த ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதற்கு மாமியாரே காரணம் என சந்தேகித்து இருக்கிறார். அவர்தான் மனைவியை தனியாக வசிக்க ஊக்குவித்து இருக்கிறார் என்றும் நினைத்து இருக்கிறார்.
இந்நிலையில், பாபிக்கு நேற்று முன்தினம் கண் அறுவை சிகிச்சை நடைபெற இருந்தது. இதனால், அவரை டெம்போவில் அழைத்து செல்கிறேன். வாருங்கள் என கூறி கிருஷ்ண தாஜி அழைத்துள்ளார். அவரும் மருமகனை நம்பி சென்றிருக்கிறார். டெம்போவுக்குள் பாபி வந்ததும், பின்புற கதவை சாத்தி விட்டு, பாபியை கடுமையாக அடித்து, தாக்கியுள்ளார்.
இதன்பின், அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து இருக்கிறார். டெம்போவில் சிறிய அளவே இடம் இருந்துள்ளது. இதனால், கிருஷ்ண தாஜியும் தீயில் சிக்கியிருக்கிறார். அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. இந்த சம்பவத்தில், கிருஷ்ண தாஜி பலியானார்.
அந்த வழியே சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ பகுதிக்கு சென்றனர். டெம்போவின் கதவை உடைத்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும், அதில் பலனின்றி 2 பேரும் உயிரிழந்து விட்டனர். இதுபற்றி நவாகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






