குஜராத் பாஜக தலைவராக மந்திரி ஜெக்தீப் விஸ்வகர்மா நியமனம்

தேர்தலில் போட்டியிட ஜெக்தீப் விஸ்வகர்மா மட்டுமே மனுதாக்கல் செய்தார்.
காந்தி நகர்,
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் நிகோல் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ஜெக்தீப் விஸ்வகர்மா (வயது 52). இவர் அம்மாநில கூட்டுறவு, உப்பு, சிறு குறு நடுத்தர தொழில், பருத்தி, காதி மற்றும் கிராமப்புற தொழில் வளர்ச்சித்துறை மந்திரியாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், பாஜக மாநில தலைவராக ஜெக்தீப் விஸ்வகர்மா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, பாஜக மாநில தலைவராக மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீல் செயல்பட்டு வந்தார். அவரது பதவி காலம் 2023ம் ஆண்டு நிறைவடைந்த நிலையில் சி.ஆர்.பாட்டீல் தொடர்ந்து குஜராத் பாஜக தலைவராக தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.
தற்போது, குஜராத் பாஜக மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட ஜெக்தீப் விஸ்வகர்மா மட்டுமே மனுதாக்கல் செய்தார். இதன் மூலம் போட்டியின்றி ஜெக்தீப் விஸ்வகர்மா பாஜக மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெக்தீப்பிற்கு அக்கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.






