4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை - அதிர்ச்சி சம்பவம்

இளைஞரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் டோங்கிரிலா கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 4 வயதில் மகள் இருந்தது. இதனிடையே, கடந்த 16ம் தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கிராமத்தில் தேடியுள்ளனர். அப்போது வீட்டின் அருகே சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் தலையில் கல்லைப்போட்டு கொடூரமாக கொல்லப்பட்டிருந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கல்லால் அடித்துக்கொல்லப்பட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் அதே கிராமத்தை சேர்ந்த விஜய் (வயது 24) என்ற இளைஞரை கைது செய்தனர். அந்த இளைஞரிடம் நடத்தப்பட்ட நிலையில் மிட்டாய் வாங்கித்தருவதாக சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் தலையில் கல்லைப்போட்டு கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, இளைஞர் விஜய்-ஐ கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் மராட்டியத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிறுமியின் கிராமம் அமைந்துள்ள மல்லிகோன் பகுதியில் இன்று கடையடைப்பு நடைபெற்றது.
மேலும், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் போராட்டங்களும் நடைபெற்றன. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர் விஜய் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இளைஞருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டுமென கூறி பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர் விஜய்யை 27ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.






