நடுவழியில் நின்ற மோனோ ரெயில்; அந்தரத்தில் சிக்கித் தவித்த பயணிகள்..

அந்தரத்தில் சிக்கித்தவித்த பயணிகள் சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டனர்.
மும்பை,
இன்று காலை மும்பையில் மோனோ ரெயில் ஒன்று திடீரென தண்டவாளத்தில் நடுவழியில் நின்றது. இதனால் என்ன செய்வதென்று அறியாமல் அந்தரத்தில் சிக்கித்தவித்த பயணிகள் சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டனர்.
வடாலாவில் உள்ள அன்டாப் ஹிலுக்கும் குரு தேக் பகதூர் நகர் மோனோ ரெயில் நிலையத்திற்கும் இடையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
காலை 7.16 மணிக்கு "தொழில்நுட்பக் கோளாறு" காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக மும்பை காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு சிக்கித் தவித்த 17 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், பின்னர் வேறு மோனோ ரெயில் மூலம் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம், கனமழையின்போது, மும்பையில் வெவ்வேறு இடங்களில் இரண்டு மோனோ ரெயில்கள் இதேபோல் நடுவழியில் நின்றது. இதில் 100 பயணிகள் சிக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.






