இந்திய ராணுவத்தில் இணையும் புதிய படைப்பிரிவுகள்

இந்திய ராணுவத்தில் டிரோன் படைப்பிரிவுகள் இணைக்கப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,
இந்திய முப்படைகளை நவீனப்படுத்தும் பணிகளை மத்திய அரசு முடுக்கி விட்டு உள்ளது. அதன்படி முப்படைகளின் அனைத்து பிரிவுகளும் படிப்படியாக நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ராணுவத்தின் காலாட்படை பிரிவில் பல்வேறு நவீனமயமாக்கும் பணிகள் நடந்து வருவதாக அதன் இயக்குனர் அஜய் குமார் கூறியுள்ளார்.
இதில் முக்கியமாக, நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் பணியமர்த்தப்பட்டு உள்ள காலாட்படை பிரிவுகளின் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக 380 காலாட்படை பிரிவுகளில் தற்போது டிரோன் படைப்பிரிவுகள் இணைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் ஒவ்வொன்றிலும் 4 கண்காணிப்பு டிரோன்களும், 6 ஆயுதங்களுடன் கூடிய டிரோன்களும் இடம்பெற்றிருக்கும். மேலும் இந்த படைப்பிரிவுக்காக ரூ.2,770 கோடியில் 4.25 லட்சம் நவீன துப்பாக்கிகள் வாங்கப்பட்டு உள்ளன. இவை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் கிடைத்து விடும்.
இந்த நிலையில், இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் 'பைரவ் படாலியன்' என்ற புதிய படைப்பிரிவுகள் சேர்க்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பைரவ் பட்டாலியனின் முதல் படைப்பிரிவு நவம்பர் 1-ம் தேதி ராணுவத்தில் இணைகிறது. அடுத்த 6 மாதங்களில் இதுபோன்ற 25 படைப்பிரிவுகளை உருவாக்கவும், ஒவ்வொரு பிரிவுகளிலும் காலாட்படை, பீரங்கிகள், வான் பாதுகாப்பு அமைப்புகளை கொண்ட 250 வீரர்கள் இடம்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படைப்பிரிவினர் சிறப்பு நடவடிக்கைகளுக்கும், வழக்கமான காலாட்படை மற்றும் எலைட் பாரா-சிறப்பு படைகளுக்கும் இடையேயான பாலமாகவும் விளங்குவார்கள் என அஜய் குமார் தெரிவித்தார். சீனா, பாகிஸ்தான் உடனான எல்லைப் பகுதிகளில் திடீர் தாக்குதல்கள், ரோந்து பணிகள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பைரவ் படாலியன் பிரிவு ஈடுபடுத்தப்பட உள்ளது.






