மாந்திரீகத்தில் ஈடுபட்டதாக முதியவர் அடித்துக்கொலை

கைது செய்யப்பட்ட 2 பேரையும் சிறையில் அடைத்தனர்.
புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் மாவட்டம் சந்தகா கிராமத்தை சேர்ந்த முதியவர் பல்ராம் டியோகம் (வயது 72). இவர் மாந்திரீகத்தில் ஈடுபடுவதாக கிராமத்தினர் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இதனிடையே, கடந்த அக்டோபர் 30ம் தேதி தோட்டத்திற்கு சென்ற பல்ராம் மாயமானார். இது குறித்து அவரது மகன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பலராமை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், சந்தகா கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியில் அழுகிய நிலையில் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அது மாயமான பல்ராமின் உடல் என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், கிராமத்தினர் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாந்திரீகத்தில் ஈடுபட்டதால் பல்ராமை கொன்று வனப்பகுதியில் வீசியதாக 2 பேரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 2 பேரையும் சிறையில் அடைத்தனர்.






