ஆபரேஷன் சிந்தூர்: யாருடைய தலையீட்டாலும் நிறுத்தப்படவில்லை - ராஜ்நாத் சிங்

ஐதராபாத்,
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்தியாவின் முப்படைகளும் இணைந்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் 9 முகாம்களை ஏவுகணை மூலம் தாக்கி 100 பயங்கரவாதிகளை கொன்றது. இதனைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இந்தியாவின் எல்லையோர மாநிலங்களை ட்ரோன் மூலம் தாக்கியது.
இந்திய ராணுவம் இதற்கு தக்க பதிலடி கொடுத்து பாகிஸ்தான் விமானப்படைத் தளங்களை தாக்கியது. பாகிஸ்தானின் ட்ரோன்கள், விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இதன்பிறகு பாகிஸ்தான் கெஞ்சி கேட்டாதால் இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் முடிவுக்கு வந்தது. மேலும் தன்னால் தான் இந்தியா, பாகிஸ்தான் போர் நின்றது என அமெரிக்க ஜனாதிபதி தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்தநிலையில் ஐதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:-
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் யாரோ ஒருவரின் தலையீட்டால் நடந்ததா என்று சிலர் கேட்கிறார்கள். நான் அதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை யாரோ ஒருவரின் தலையீட்டால் நிறுத்தப்படவில்லை. பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் எந்த மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்யவில்லை.இந்தியா - பாக். போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் தலையீட்டை இந்தியா ஏற்கவில்லை என பாக். துணை பிரதமர் இஷாக் கூறியுள்ளார். வர்த்தகத்தை கருவியாக பயன்படுத்தி போரை நிறுத்தியதாக கூறிய அமெரிக்க ஜனாதிபதியின் டிரம்ப்பின் பேச்சுக்கு பாகிஸ்தான் துணை பிரதமர் தெளிவுபடுத்தி உள்ளார். இது இருதரப்பு பிரச்சினை என்றும், மூன்றாம் தரப்பு தலையிட முடியாது என்று பிரதமர் மோடியும் திட்டவட்டமாக தெளிவுபடுத்தியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.






