கற்பனை செய்ய முடியாத அளவு துல்லியமாக 'ஆபரேஷன் சிந்தூர்' மேற்கொள்ளப்பட்டது - ராஜ்நாத் சிங்


கற்பனை செய்ய முடியாத அளவு துல்லியமாக ஆபரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டது - ராஜ்நாத் சிங்
x

பாதுகாப்பு படையினரின் துணிச்சல் மிகவும் பாராட்டுக்குரியது என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா மே 7-ந்தேதி(நேற்று) அதிரடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் 4 இடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாதிகள் உள்ள அலுவலகங்கள், பயிற்சி முகாம்கள், அவர்களது வசிப்பிடங்கள் என 21 பயங்கரவாத நிலைகளை தரைமட்டமாக்கின.

இந்நிலையில், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்ட இந்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார். இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-

"கற்பனை செய்ய முடியாத அளவுக்கு துல்லியமாக 'ஆபரேஷன் சிந்தூர்' செயல்படுத்தப்பட்டது மிகவும் பாராட்டத்தக்கது. அதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். எந்த அப்பாவிக்கும் தீங்கு விளைவிக்காமல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பாதுகாப்பு படையினர் எடுத்த நடவடிக்கையும், அவர்கள் காட்டிய துணிச்சலும் மிகவும் பாராட்டுக்குரியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. இது நமக்கு பெருமை சேர்க்கும் விஷயம்."

இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

1 More update

Next Story