வலி இல்லாத ரெயில் கட்டண உயர்வு

முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகளுக்கு 215 கிலோ மீட்டருக்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஒரு காசு வீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு குறைவான கட்டணத்தில் விரைவாகவும், சுகமாகவும், பாதுகாப்பாகவும், சவுகரியமாகவும் செல்வதற்காக பெரும்பாலானவர்கள் ரெயில் சேவையையே நாடுகிறார்கள். தமிழ்நாட்டின் கடைக்கோடியான கன்னியாகுமரி முதல் அசாமில் உள்ள திப்ருகர் வரை ஓடும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில்தான் இந்தியாவிலேயே அதிக தூரம் ஓடும் ரெயிலாகும். இது 4,188 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது. மற்ற போக்குவரத்துகளை காட்டிலும் ரெயிலுக்கான கட்டணம் மிக குறைவு என்பதால் ஏழை-எளிய மக்களுக்கும் சாத்தியப்படக்கூடியதாக இருக்கிறது. ஆனாலும் நிதிச்சுமையை சமாளிப்பதற்காக ரெயில்வே நிர்வாகம் அவ்வப்போது பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்தி வருகிறது. பொது போக்குவரத்து என்றாலும் வர்த்தக ரீதியில் ரெயிலை ஓட்டும்போது வரவு-செலவையும் கணக்கிடுவது இன்றியமையாததாகும்.
பராமரிப்பு செலவு, இயக்க செலவு, விரிவாக்க செலவு, ஊழியர்களின் சம்பளம், பென்ஷன் ஆகியவற்றை கணக்கிட்டு பொதுமக்களால் தாங்கக்கூடிய அளவில் ரெயில் டிக்கெட் கட்டணம் அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, நாளை (வெள்ளிக்கிழமை) அமலுக்கு வருகிற வகையில் டிக்கெட் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் இது 2-வது முறையாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வாகும். கடந்த ஜூலை மாதம் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண பெட்டிகளில் பயணம் செய்வதற்கான கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு காசு வீதம் உயர்த்தப்பட்டது. தற்போது, எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரெயில்களில் குளிர்சாதன மற்றும் குளிர்சாதன வசதி அல்லாத பெட்டிகளில் கிலோ மீட்டருக்கு 2 காசுகள் வீதம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகளுக்கு 215 கிலோ மீட்டருக்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஒரு காசு வீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு குறிப்பாக தினமும் பயணம் செய்யும் பயணிகளுக்கான சீசன் டிக்கெட் கட்டணம் மற்றும் மின்சார ரெயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. 6 மாத இடைவெளிக்குள் மீண்டும் ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதே என்று சிலர் குறைபட்டாலும், கடந்த ஜூலை மாதம் 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. அதாவது 2020-ல் உயர்த்தப்பட்டபோது குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ரெயில் பெட்டிகளுக்கு கிலோ மீட்டருக்கு 4 காசுகளும், குளிர்சாதன வசதி இல்லாத ரெயில் பெட்டிகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 காசுகளும் உயர்த்தப்பட்டது ரெயில் பயணிகளை பெரிதும் பாதித்தது.
ஆனால் இப்போது தமிழ்நாட்டுக்குள் அதிக தூரம் பயணம் செய்ய, அதாவது தலைநகர் சென்னையில் இருந்து அதன் எதிர் துருவத்தில் உள்ள முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு செல்ல அதிகபட்சமான கட்டண உயர்வே ரூ.15 தான். கட்டண உயர்வு பற்றி சில அதிகாரிகள் கூறும்போது, “குளிர்சாதன ரெயில் பெட்டிகள், குளிர்சாதன வசதி இல்லாத ரெயில் பெட்டிகள் என எந்த வகுப்பில் பயணம் செய்தாலும் 500 கிலோ மீட்டர் தூரத்துக்கு செல்ல ரூ.10 தான் பயணிகள் கூடுதலாக கொடுக்கவேண்டியது இருக்கும்” என்றனர். ஆக இந்த கட்டண உயர்வு நிச்சயம் பொதுமக்களுக்கு வலிக்காது. பாதுகாப்பான பயணத்துக்காக ரெயில்வே மேற்கொள்ளும் மாற்றங்கள், நவீனத்தை புகுத்துவதற்காக செய்யும் செலவுகள், உயர்ந்து வரும் இயக்க மற்றும் பராமரிப்பு செலவுகள் என எல்லாவற்றையும் கூட்டி, கழித்து பார்த்தால் இந்த கட்டண உயர்வு சாதாரணமானதுதான். பயணிகளால் தாங்கிக்கொள்ளக்கூடியதுதான்.






