‘குஜராத்திற்கு வழங்கியதில் ஒரு சதவீதத்தைக் கூட பிரதமர் மோடி பீகாருக்கு வழங்கவில்லை’ - தேஜஸ்வி யாதவ்

பிரதமர் மோடி குஜராத்தில் தொழிற்சாலைகளை அமைத்துவிட்டு பிகாரில் வெற்றியை எதிர்பார்ப்பதாக தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டினார்.
பாட்னா,
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் நேற்று பீகாரில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கினார். சமஸ்திபூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியபோது, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மோசடிகளில் ஈடுபட்டதாகவும், அவர்களின் தலைவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர் என்றும் விமர்சித்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் பேச்சு குறித்து பாட்னாவில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், பீகார் மக்கள் மாற்றத்திற்கான மனநிலையில் உள்ளனர் என்றும், பீகாரில் தற்போதைய சூழ்நிலை மகாகத்பந்தன் கூட்டணிக்கு ஆதரவாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
பீகாருக்கு பிரதமர் மோடி என்ன செய்துள்ளார்? என கேள்வி எழுப்பிய தேஜஸ்வி யாதவ், குஜராத்தில் தொழிற்சாலைகளை அமைத்துவிட்டு பிகாரில் வெற்றியை எதிர்பார்ப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், குஜராத்திற்கு வழங்கியதில் ஒரு சதவீதத்தைக் கூட பீகாருக்கு பிரதமர் மோடி வழங்கவில்லை என தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டினார்.






