'அமித்ஷாவிடம் பிரதமர் மோடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' - மம்தா பானர்ஜி

அமித்ஷா பொறுப்பு பிரதமர் போல் செயல்படுகிறார் என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, டார்ஜிலிங்கில் நிலச்சரிவு பாதிப்பை பார்வையிட்டு விட்டு, கொல்கத்தா திரும்பினார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
“வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் தேர்தல் கமிஷனை பா.ஜ.க. தவறாக பயன்படுத்துகிறது. அதன் தலைவர் அமித்ஷா இ்ங்கு வந்து லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்குவேன் என்று சொல்கிறார். பா.ஜ.க. உத்தரவுப்படி தேர்தல் கமிஷன் செயல்பட வேண்டுமா? அல்லது ஜனநாயக உரிமைகளையும், மக்கள் உரிமைகளையும் காக்க செயல்பட வேண்டுமா?
அமித்ஷா, பொறுப்பு பிரதமர் போல் செயல்படுகிறார். ஆனால் பிரதமர் மோடிக்கு எல்லாம் தெரியும். அமித்ஷாவை எப்போதும் நம்பாதீர்கள் என்று பிரதமரை கேட்டுக்கொள்கிறேன். ஒருநாள் அவர் உங்களுக்கு மீர் ஜாபராக மாறிவிடுவார். எனவே, எச்சரிக்கையாக இருங்கள். பா.ஜ.க. நாட்டை அழித்து வருகிறது. நிரந்தரமாக ஆட்சியில் இருந்துவிட முடியாது. இப்படி ஒரு கர்வம் பிடித்த, சர்வாதிகார அரசை நான் பார்த்தது இல்லை.”
இவ்வாறு அவர் கூறினார்.






