பீகார், மேற்கு வங்க மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நாளை பயணம்

கோப்புப்படம்
பீகாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்றத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி பீகார், மேற்கு வங்க மாநிலங்களுக்கு நாளை (ஜூலை 18) பயணம் மேற்கொள்கிறார். பீகாரின் மோதிஹரியில் ரூ.7,200 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்றத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
தர்பங்காவில் புதிய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவையும், பாட்னாவில் மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள அதிநவீன மென்பொருள் மேம்பாட்டிற்கான தொடக்கநிலை ஆலையையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மேலும் பீகாரில் ரெயில் போக்குவரத்து இணைப்புக்கு பெரும் உத்வேகம் அளிக்கும் வகையில், நான்கு புதிய அம்ரித் பாரத் ரெயில் சேவைகளை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் ரூ.5,000 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்ற திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கிறார்.






