மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்: இந்தியா உதவிகள் செய்ய தயார் - பிரதமர் மோடி


மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்: இந்தியா உதவிகள் செய்ய தயார் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 28 March 2025 3:49 PM IST (Updated: 28 March 2025 4:17 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியிருந்தது. சிறிது நேரத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அண்டை நாடுகளான வியட்நாம், மலேசியா, வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது.

நிலநடுக்கம் காரணமாக, மியான்மர் மற்றும் தாய்லாந்தின் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன. தாய்லந்து தலைநகர் பாங்காக்கில் மிகப்பெரிய கட்டிடம் சரிந்து விழுந்துள்ளது. புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் ஏராளமான ஊழியர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மியான்மரின் மாண்டலே நகரில் உள்ள ஒரு மசூதி இடிந்து விழுந்ததில் சுமார் 20 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்டிடங்கள் இடிந்து விழுந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில் மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட பேரிடருக்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து கவலை அளிக்கிறது. அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்கிறேன்.

இந்தியா சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது. இது சம்பந்தமாக, அதிகாரிகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளேன். மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுடன் தொடர்பில் இருக்குமாறு வெளியுறவு அமைச்சகத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story