ஆபரேஷன் சிந்தூருக்கு மீண்டும் தயார்; ராணுவ தளபதி உபேந்திர திவேதி எச்சரிக்கை

பாகிஸ்தான் ஏதேனும் கோழைத்தனமான செயலுக்கு முயன்றால் வலுவான பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே மாதம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிரில் உள்ள பயங்கரவாத முகாம்களை பாதுகாப்புப்படையினர் அழித்தனர். இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு தயார் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது:-
பாகிஸ்தான் ஏதேனும் கோழைத்தனமான செயலுக்கு முயன்றால் வலுவான பதிலடியை எதிர்கொள்ள நேரிடும். ஆயுதப்படைகள் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு முழுமையாக தயாராக இருக்கிறது. பயங்கரவாதிகள் வாழ்ந்த இடங்களை மட்டுமே குறிவைத்தோம். பொதுமக்கள் பகுதிகள் அல்லது ராணுவ நிலைகளை தாக்கவில்லை. நாங்கள் விரும்பியதை அடைந்தோம், நாங்கள் அவர்களைப் போன்றவர்கள் அல்ல என்பதை பாகிஸ்தானுக்குப் புரிய வைத்தோம். நாங்கள் தர்மயுத்தத்தை பின்பற்றுபவர்கள்.
இவ்வாறு ராணுவ தளபதி உபேந்திர நிவேதி கூறினார்.






