போராட்டம் ஜனநாயக உரிமை, ஆனால் வன்முறையோ தேசத்துரோகம்: முஸ்லிம் அமைப்பு

இந்தியா கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது என முஸ்லிம் மன்ச் அமைப்பு கூறியுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு திருத்த சட்டம் நிறைவேறியுள்ளது. அது விரைவில் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் சுதி, ஜாங்கிப்பூர் மற்றும் சாம்சர்கஞ்ச் பகுதிகளில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த 11-ந்தேதி பெரிய அளவில் போராட்டம் நடந்தது.
அதில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட கும்பல் பல்வேறு இடங்களிலும் பொது சொத்துகளை சூறையாடியது. வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில், வன்முறை பாதித்த சாம்சர்கஞ்ச் பகுதியில் ஜாப்ராபாத் என்ற இடத்தில் வீட்டில் தந்தை மற்றும் மகன் கொல்லப்பட்டனர். வன்முறைக்கு மொத்தம் 3 பேர் பலியானார்கள்.
இந்நிலையில், வன்முறை தொடர்பாக முர்ஷிதாபாத்தில் 220 பேர் கைது செய்யப்பட்டனர். தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், முர்ஷிதாபாத்தில் தந்தை மற்றும் மகன் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 2 பேரும் அடங்குவர்.
போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில், போலீஸ் வாகனங்கள் 5 தீ வைத்து கொளுத்தப்பட்டன. காவல் அதிகாரிகள் மீது கற்கள் வீசப்பட்டன. சிறை வேன் ஒன்று சூறையாடப்பட்டது. வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுபற்றி முஸ்லிம் ராஷ்டீரிய மன்ச் அமைப்பு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மீது குற்றம் சாட்டியுள்ளது. எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது என்றும் கூறியுள்ளது.
அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயகம் என்ற பெயரில் வன்முறையை பரப்புவது என்பது தேசத்துரோக செயலாகும் என்றும் எந்த சூழலிலும் இதனை சகித்து கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டு உள்ளது.
ஒற்றுமையான இந்தியா என்ற கனவானது ஒவ்வொரு குடிமகனாலும் பகிரப்படுகிறது என தெரிவித்ததுடன், அந்த ஒற்றுமையின் பெயரில், சிலர் நாட்டுக்கு தீ வைக்கின்றனர் என்பது பெரிய துரோகம் என்றும் தெரிவித்து உள்ளது.
தேச நலனில் விழிப்புணர்வுடன் மக்கள் இருக்க வேண்டும் என கேட்டு கொண்டதுடன், பயங்கரவாதிகளின் வடிவங்களை, வாக்கு வங்கி அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் மற்றும் அன்பு என்ற பெயரில் வெறுப்புணர்வுக்கான கடைகளை நடத்துபவர்களையும் கண்டு கொள்ளுங்கள் என்று கேட்டு கொண்டுள்ளது. இந்த வன்முறை ஒரு திட்டமிட்ட சதி என்றும் தெரிவித்து உள்ளது.






