உலக நாடுகளில் அமைதிக்காப்பு பணிகளில் இந்திய ராணுவ பெண் அதிகாரிகளின் பங்களிப்பு: ராஜ்நாத் சிங் பெருமிதம்

சர்வதேச விதிகளை சில நாடுகள் வெளிப்படையாக மீறுகின்றன என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
புதுடெல்லி,
சர்வதேச அமைதிக்காப்பு படைகளுக்கு வீரர்களை அனுப்பி பங்களிப்பு செய்யும் நாடுகளின் தலைமை ராணுவ அதிகாரிகள் மாநாடு இன்று முதல் 16-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை இந்தியா முதல்முறையாக தலைமை தாங்கி நடத்துகிறது.
மாநாட்டின் தொடக்க விழாவில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:-
உலக நாடுகள் பலவற்றில் அமைதிக்காப்பு பணிகளில் பணியாற்றும் இந்திய ராணுவ பெண் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நம்பிக்கையை வளர்த்து வருகிறார்கள். இப்படைகளில் பெண்கள் செயல்படுவது அமைதி காக்கும் பணியின் செயல்திறனை மேம்படுத்துகிறது, உள்ளூர் மக்களிடம் நம்பிக்கையை உருவாக்குகிறது.
இந்த சேவையில் இந்தியா முன்னோடியாக இருந்து வருகிறது. 2007-ம் ஆண்டு லைபீரியாவில் பணியமர்த்தப்பட்ட எங்கள் அனைத்து மகளிர் பாதுகாப்பு பிரிவு, ஒரு உலகளாவிய அடையாளமாக மாறியது. அவர்களின் தொழில்முறை மற்றும் புரிதலுடன் கூடிய சேவை, லைபீரியப் பெண்களின் ஒரு தலைமுறையை அவர்களின் தேசிய காவல்துறையில் சேரத் தூண்டியது.
இன்று, இந்தியப் பெண் அதிகாரிகள் தெற்கு சூடான், கோலன் ஹைட்ஸ் மற்றும் லெபனானில் பணியாற்றுகிறார்கள், ரோந்துப் பணிகளை வழிநடத்துகிறார்கள், உள்ளூர் மக்களுடன் இணைந்து பல ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபடுகிறார்கள், உள்ளூர் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறார்கள். 2024-ம் ஆண்டில், காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஐ.நா. அமைதி காக்கும் பணியில் சிறந்த சேவை செய்ததற்காக, இந்திய ராணுவ பெண் அமைதி காக்கும் படையினருக்கு ஆண்டின் சிறந்த ஐக்கிய நாடுகளின் இராணுவ பாலின வக்கீல் விருது வழங்கப்பட்டது
வளர்ந்து வரும் சவால்களைச் சமாளிப்பதற்கும் உலகளாவிய அமைதியை உறுதி செய்வதற்கும் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினருக்கு பங்களிக்கும் நாடுகளுக்கு வழிகாட்டும் கொள்கையாக, மேம்படுத்தப்பட்ட ஆலோசனை, ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை அடங்கிய 4சி உத்தியை ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசுகையில், அமைதி காக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து சீராக நடைபெற அனைத்து உறுப்பு நாடுகள், குறிப்பாக மேம்பட்ட தொழில்நுட்ப திறன்களைக் கொண்டவர்கள், தங்களது துருப்புக்கள், தளவாடங்கள், தொழில்நுட்பம் போன்றவை மூலம் தங்கள் ஆதரவை அதிகரிக்க வேண்டும். அமைதி காக்கும் படையினரின் வெற்றியானது, வீரராஜாளின் எண்ணிக்கையை மட்டுமல்ல, தயார்நிலையையும் சார்ந்துள்ளது. டெல்லியில் உள்ள தேசிய அமைதி காப்பு படை, 90க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது.
இப்போதெல்லாம், சில நாடுகள் சர்வதேச விதிகளை வெளிப்படையாக மீறுகின்றன, அதே நேரத்தில் சில நாடுகள் தன்னிச்சையான விதிகளை உருவாக்கி அடுத்த நூற்றாண்டில் ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றன. இந்தியா, சர்வதேச விதிகள் சார்ந்த ஒழுங்கை நிலைநிறுத்துவதில் வலுவாக நிற்கிறது. இந்தியா மகாத்மா காந்தியின் பூமி, இங்கு அமைதி, அகிம்சை ஆகியவை ஆழமாக வேரூன்றியுள்ளது. மகாத்மா காந்தியைப் பொறுத்தவரை, அமைதி என்பது போர் இல்லாதது மட்டுமல்ல, நீதி, நல்லிணக்கம் மற்றும் தார்மீக வலிமையம். இவ்வாறு அவர் கூறினார்.
இம்மாநாட்டில், அல்ஜீரியா, ஆர்மீனியா, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பூட்டான், பிரேசில், புருண்டி, கம்போடியா, எகிப்து, எத்தியோப்பியா, பிஜி, பிரான்ஸ், கானா, இத்தாலி, கஜகஸ்தான், கென்யா, கிர்கிஸ்தான், மடகாஸ்கர், மலேசியா, மங்கோலியா, மொராக்கோ, நேபாளம், நைஜீரியா, போலந்து, ருவாண்டா, இலங்கை, செனகல், தான்சானியா, தாய்லாந்து, உகாண்டா, உருகுவே, வியட்நாம் ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளன.






