சபரிமலை; தங்க முலாம் பூசிய தகடுகளை திரும்ப கொண்டு வர வேண்டும்- கேரள ஐகோர்ட்டு உத்தரவு

சபரிமலையில் சிலைகள் மீது பொருத்தப்பட்டு இருந்த தங்க முலாம் பூசிய தகடுகளை சரிசெய்து திரும்ப கொண்டு வர வேண்டும் என்று தேவசம்போர்டுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பெரும்பாவூர்,
சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னதி முன்பு உள்ள 2 துவார பாலகர் சிலைகள் மீது தங்க முலாம் பூசிய தகடுகள் பொருத்தப்பட்டு இருந்தது. சமீபத்தில் அந்த சிலைகள் மீதிருந்த தங்க முலாம் பூசிய தகடுகளை பழுது நீக்கம் செய்வதற்காக தேவசம்போர்டு சிறப்பு ஆணையாளரிடம் அனுமதி பெறாமல் தேவசம்போர்டு நிர்வாகிகள் கழற்றி எடுத்து வாகனத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இதன் மூலம் ஐகோர்ட்டு உத்தரவை மீறியதாக கேரள ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சபரிமலையில் விலை மதிப்புள்ள பொருட்களை கழற்றி எடுத்து வெளியே கொண்டு போய் பழுது நீக்கி சரிசெய்து கொண்டு வர தேவசம்போர்டு சிறப்பு ஆணையாளரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதை கடைபிடிக்காமலும், சிறப்பு ஆணையாளரிடம் அனுமதி பெறாமலும் சபரிமலை சன்னிதானத்தில் உள்ள 2 துவார பாலகர் சிலைகள் மீது போடப்பட்டிருந்த தங்க முலாம் பூசிய தகடுகள் கழற்றி எடுத்து சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இது ஏற்புடையது அல்ல என்று தேவசம்போர்டுக்கு கண்டனம் தெரிவித்தது.
இந்தநிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தங்க முலாம் பூசிய தகடுகள் பொருத்தப்பட்டது குறித்த அனைத்து ஆவணங்களையும் ஐகோர்ட்டு பரிசீலித்தது. அதில் எவ்வளவு தங்கம் பூசப்பட்டு உள்ளது. சிலைகள் மீது தங்கம் கலந்து பூசப்பட்டதா அல்லது தங்க தகடுகள் மூலம் செய்யப்பட்டதா என்பது குறித்தும் ஆவணங்களில் தெளிவான விளக்கம் இல்லை என்று தெரிவித்தது.
மேலும் 2 துவார பாலகர் சிலைகள் மீது பொருத்தப்பட்டு இருந்த தங்க முலாம் பூசிய தகடுகளை சரிசெய்யும் பணிகளை சட்டப்படி மேற்கொண்டு, அதனை சென்னையில் இருந்து உடனே திரும்ப கொண்டு வர வேண்டும். சபரிமலை சன்னிதானத்தில் மீண்டும் பொருத்த வேண்டும் என்று தேவசம்போர்டுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர் வழக்கு விசாரணை நாளைக்கு (புதன்கிழமை) ஒத்தி வைக்கப்பட்டது.






