இந்தியாவின் வேகமான வளர்ச்சியை சிலர் விரும்புவதில்லை: ராஜ்நாத் சிங் மறைமுக தாக்கு

நாட்டின் பாதுகாப்புத்துறை ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் ரைசன் என்ற பகுதியில் ரெயில் உற்பத்தி மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:-
இந்தியா தொடர்ந்து வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதனை சிலர் விரும்புவதில்லை; பொறுத்துக் கொள்ளவும் முடியவில்லை. எல்லோருக்கும் நான்தான் முதலாளி என்று நினைக்கும் சிலர் இந்தியா எப்படி? வேகமாக முன்னேறலாம் என கேள்வி கேட்கின்றனர்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களின் விலை, மற்ற நாடுகளில் தயாரிக்கப்படும் பொருட்களை விட அதிகமானதாக இருக்க வேண்டும் என பலர் முயற்சி செய்கின்றனர். இதனால், பொருட்கள் விலை உயர்ந்தால் அவற்றை உலக நாடுகள் வாங்காது என நினைக்கின்றனர். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
ஆனால், இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. உலகின் மிகப்பெரிய சக்தியாக இந்தியா மாறுவதை எந்த சக்தியும் தடுக்க முடியாது என்பதை உறுதியாக கூறுகிறேன். பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்து 24 நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறோம். நாட்டின் பாதுகாப்புத்துறை ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுதான் இந்தியாவின் பலம். இவ்வாறு அவர் பேசினார்.






