கார் வெடிப்புக்கு காரணமானோர் மீது கடும் தண்டனை - ராஜ்நாத் சிங்

இந்த துயரத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை சாலையில் நின்று கொண்டிருந்த ஹுண்டாய் ஐ 20 கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயங்களுடன் டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நடந்த இடத்தில் நாட்டின் அனைத்து புலனாய்வு அமைப்புகளும் விசாரணைத் தொடங்கியிருக்கும் நிலையில், முதல்கட்டமாக முகமது உமர் என்ற டாக்டர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து காரில் ஒரு டெட்டனேட்டரை வைத்து காரை வெடிக்கச் செய்ததாக முதற்க்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:-
டெல்லியில் நேற்று நடந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில்,பலியானவர்களின் குடும்பங்களுக்கு வலிமையையும் தைரியத்தையும் அளிக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.
இந்த சம்பவம் தொடர்பாக நாட்டின் முன்னணி புலனாய்வு அமைப்புகள் விரைவான மற்றும் முழுமையான விசாரணையை நடத்தி வருகின்றன என்பதை எனது இந்திய மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். விசாரணையின் முடிவுகள் விரைவில் தெரிவிக்கப்படும். இந்த துயரத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். எந்த சூழ்நிலையிலும் அவர்கள் தப்பவிடப்பட மாட்டார்கள் என்பதை நான் உறுதியாக நாட்டிற்கு உறுதியளிக்க விரும்புகிறேன். கார் வெடிப்புக்கு காரணமானோர் மீது கடும் தண்டனை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






