திருமண ஆசை காட்டி.. இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சித்ரதுர்கா,
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரேயை சேர்ந்த இளம்பெண், பெங்களூருவில் வசித்து வருகிறார். இவர் சித்ரதுர்கா டவுன் மகளிர் போலீசில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார்.
அந்த புகாரில், “சித்ரதுர்கா டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர், கடிலிங்கப்பா. இவர் கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் எனக்கு பழக்கமானார். இருவரும் நட்பாக பழகி வந்தோம். அதன்பிறகு என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி கடிலிங்கப்பா என்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்.
அதன்பிறகு அவர் என்னிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். மேலும் அவரது செல்போனை தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் அது சுவிட்ச் ஆப் என வந்தது. அதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு கடிலிங்கப்பா, இன்ஸ்டாகிராமில் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து குறுஞ்செய்தி அனுப்பினார்.
என்னை திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்து திருமணத்திற்கு மறுப்பதுடன், சாதி சொல்லி திட்டி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார். அந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் கடிலிங்கப்பா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதன்படி பி.என்.எஸ். 64 (போலீஸ் அதிகாரியாக இருந்து பாலியல் வன்கொடுமை செய்தல்), 69 (திருமணம் செய்து கொள்வதாக வஞ்சகமாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தல்) மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






