சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேல்முறையீட்டு மனு: சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது


சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேல்முறையீட்டு மனு: சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது
x

அமலாக்கத்துறை நோட்டீசுக்கு எதிராக தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

புதுடெல்லி,

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அவர் அந்த காலகட்டத்தில் ரூ.2.35 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது ஊழல் தடுப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரின் மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமாா், பிரபு ஆகியோா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இந்த வழக்கில் இருந்து அனைவரையும் விடுவித்து திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஊழல் தடுப்புத்துறை போலீசார் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விசாரணை நீதிமன்ற தீா்ப்பை ரத்து செய்தது. இதை எதிா்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கின் அடிப்படையில் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. அதன்படி ஐ.பெரியசாமி, அவரது மகனும் பழனி தொகுதி எம்.எல்.ஏ.வுமான செந்தில்குமாா், மகள் இந்திரா ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையின்போது சொத்து, வங்கிக் கணக்கு, முதலீடு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியது. சொத்துக்கள் முடக்கம் தொடர்பாக விளக்கம் கேட்டு ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரியும், அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினா் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஐ.பெரியசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜான் சத்தியன், சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. எனவே அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 5-ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தனர். அதைத் தொடர்ந்து ஜனவரி 5-ம் தேதி இம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ள ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து அமைச்சர் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story