ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு நீக்கியது. அதன்பிறகு, ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது.ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2023-ல் இந்த வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை ரத்து செய்தது செல்லும் என்று தெரிவித்தது.
மேலும், 2024 செப்டம்பர் மாதத்துக்குள் சட்டமன்றத் தேர்தலை நடத்தி, ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்துவிட்டது. இருப்பினும், மாநில அந்தஸ்து இன்னும் வழங்கப்படவில்லை.இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கல்வியாளர் ஜஹூர் அகமது பட் மற்றும் சமூக ஆர்வலர் குர்ஷைத் அகமது மாலிக் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவில், மாநில அந்தஸ்து மறுக்கப்படுவது ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே.வி. சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "பஹல்காம் தாக்குதலை கருத்தில் கொள்ள வேண்டும். கள எதார்த்தத்தை புறக்கணிக்க முடியாது. அதனை கருத்தில் கொள்ள வேண்டும்," என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரத்தில் எட்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.






