மூவர்ண கொடிக்கு 21 முறை வணக்கம் செலுத்த உத்தரவிட்டு ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்டு


மூவர்ண கொடிக்கு 21 முறை வணக்கம் செலுத்த உத்தரவிட்டு ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்டு
x

பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பிய நபர் காவல் நிலையத்தில் உள்ள தேசிய கொடியின் முன் 21 முறை வணக்கம் செலுத்தி, 2 முறை பாரத் மாதா கி ஜெய் என உச்சரிக்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

போபால்,

மத்திய பிரதேசத்தின் போபால் நகரை சேர்ந்தவர் பைசல் என்ற பைசன். இவர், பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பினார் என குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி போபாலில் உள்ள மிஸ்ராட் காவல் நிலையத்தில் கடந்த மே மாதம் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.

இரு வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை தூண்டும் வகையில் அவரது இந்த செயல் இருந்துள்ளது என குற்றச்சாட்டு பதிவானது. இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து விடுவிக்கும்படி, ஜாமீன் கோரி மத்திய பிரதேச ஐகோர்ட்டில் பைசல் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுபற்றி நீதிபதி பாலிவால் அளித்த தீர்ப்பில், ரூ.50 ஆயிரம் தனிநபர் ஜாமீன் மற்றும் அதே அளவு உத்தரவாத தொகையையும் பைசல் செலுத்தினால் அவர் ஜாமீனில் விடுவிக்கப்படலாம் என கூறினார்.

எனினும், சில நிபந்தனைகளையும் விதித்துள்ளார். இதன்படி, விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் காலம் முழுவதும் பைசல் நேரில் ஆஜராக வேண்டும். வழக்கு விசாரணை முடியும் வரை, ஒவ்வொரு மாதத்தின் முதல் மற்றும் 4-வது செவ்வாய் கிழமையும் நேரில் வர வேண்டும்.

அப்படி அவர் வரும்போது, மிஸ்ராட் காவல் நிலையத்தில் உள்ள தேசிய கொடியின் முன் 21 முறை வணக்கம் செலுத்தி, 2 முறை பாரத் மாதா கி ஜெய் என உச்சரிக்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் பிறந்து, வளர்ந்த அவருக்கு அதற்கான பெருமையுணர்வு மனதில் தோன்ற வேண்டும் என்பதற்காக இந்த நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன என கோர்ட்டு தெரிவித்தது.

இந்த விசயத்தில் பைசல், இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்து விட்டு, பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பிய வீடியோ சான்று ஒன்று கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. பைசலுக்கு எதிராக 14 வழக்குகள் உள்ளன என்றும் அவர் இதுபோன்ற குற்ற பின்னணி கொண்டவர் என்றும் கூறி, ஜாமீன் வழங்க கூடாது என அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

1 More update

Next Story