பள்ளியில் நடந்த செல்ல பிராணிகள் கண்காட்சிக்கு யானையை அழைத்து வந்த மாணவி

கம்பீரமாக நின்ற யானை முன்பு பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் கோவில் திருவிழாக்களில் யானைகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். அவை அலங்கரிக்கப்பட்டு நெற்றி பட்டம் அணிவிக்கப்பட்டு எழுந்தருளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கின்றன. திருச்சூரில் ஆண்டுதோறும் நடைபெறும் பூரம் திருவிழாவில் கோவில் முன்பு இருபுறமும் தலா 15 யானைகள் அணிவகுத்து நடைபெறும் குடை மாற்றும் நிகழ்வை காண பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தருகின்றனர்.
இந்தநிலையில் பள்ளியில் நடந்த செல்ல பிராணிகள் கண்காட்சிக்கு மாணவி ஒருவர் யானையை அழைத்து வந்தார். இதை பார்த்த பள்ளி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
எர்ணாகுளம் அருகே கரூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ‘பெட் ஷோ’ எனப்படும் செல்ல பிராணிகள் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பள்ளி மாணவிகள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்ல பிராணிகளை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி பலர் பூனை, நாய், குதிரை போன்றவற்றை காட்சிப்படுத்தினர்.
அப்போது செல்ல பிராணிகள் கண்காட்சிக்கு மாணவி ஒருவர் யானையை அழைத்து வந்தார். இது செல்ல பிராணிகள் கூட்டத்தில் பெரிய விலங்காக காட்சியளித்தது. இதை பார்த்த பள்ளி நிர்வாகம் மட்டுமின்றி மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அதே சமயம் அந்த மாணவி, யானையை அங்கிருந்தவர்களிடம் காண்பித்தார். பின்னர் யானை மீது சிலர் ஏறி அமர்ந்ததாக தெரிகிறது.
கம்பீரமாக நின்ற யானை முன்பு பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதை அறிந்த எடப்பள்ளி வனச்சரக வனத்துறையினர், பள்ளி நிர்வாகத்தினரிடம் விளக்கம் கேட்டனர். அனுமதி பெற்று யானை பள்ளிக்கு கொண்டு வரப்பட்டதா என்றும், மாணவிகள் யானை மீது ஏறி அமர அனுமதி பெறப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பள்ளி நிர்வாகம் தரப்பில், உரிய அனுமதி பெற்று யானையை பள்ளிக்கு கொண்டு வந்ததாகவும், யானை மீது ஏறி அமர்ந்தது யானை உரிமையாளர்கள் தான் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த சம்பவம் குறித்து எழுத்து மூலமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்தினருக்கு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.






