திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 13.5 கோடி லட்டுகள் விற்று புதிய சாதனை


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 13.5 கோடி லட்டுகள் விற்று புதிய சாதனை
x

2025-ம் ஆண்டு லட்டு பிரசாத விற்பனையில் மறக்க முடியாத சாதனை ஆண்டாக அமைந்துள்ளது.

திருமலை,

திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் ‘லட்டு’ உலக பிரசித்தி பெற்றதாகும். லட்டு பிரசாத விற்பனையில் திருப்பதி தேவஸ்தானம் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

கோவிலில் 2024-ம் ஆண்டு 12 கோடியே 15 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2025-ம் ஆண்டு 13 கோடியே 52 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, 2025-ம் ஆண்டு 1 கோடியே 37 லட்சம் லட்டுகள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த 2024-ம் ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாகும்.

2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி அன்று கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் 5 லட்சத்து 13 ஆயிரம் லட்டுகள் விற்பனையாகி புதிய சாதனையை படைத்தது. கோவிலில் சாதாரண நாட்களில் தினமும் 4 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. முக்கிய திருவிழா நாட்களில் பக்தர்கள் தேவைக்காக 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை கூடுதலாக லட்டுகள் தயாரித்து இருப்பு வைக்கப்படுகின்றன.

கோவிலில் லட்டுகள் தயாரிக்கும் சமையல் அறையில் 700 வைணவ பிராமணர்கள் 2 ஷிப்டுகளில் 24 மணி நேரமும் விதி நியமங்களுடன் லட்டு பிரசாதத்தை தயாரித்து வருகின்றனர். சமீபகாலமாக லட்டு பிரசாதத்தின் தரம் மற்றும் ருசி அதிகரித்துள்ளதாக, பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2025-ம் ஆண்டு லட்டு பிரசாத விற்பனையில் மறக்க முடியாத சாதனை ஆண்டாக அமைந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story