டெல்லி கார் வெடிப்பு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

டெல்லியில் காவல்துறையினர் பல இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றன.
டெல்லி,
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று (10-11-2025) மாலை ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி, தீப்பிழம்பாக மாறியது. இதில் அருகில் இருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. எதிர்பாராத இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நின்றிருந்தவர்களும், சாலையில் சென்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
கார் வெடித்து சிதறியதில் அதன் பாகங்கள் சுமார் 300 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டது. அப்போது சாலையில் வாகனங்களில் இருந்தவர்கள், நடந்து சென்றவர்கள் நிலைகுலைந்து போயினர். இந்த சம்பவத்தில் பலர் காயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் அங்கு விரைந்தனர். தீயணைப்பு பணி துரிதமாக நடந்தது.
இந்த பயங்கர சம்பவத்தில் 10 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் பேர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் நடந்த பயங்கர சம்பவம் குறித்து விசாரிக்க என்.ஐ.ஏ. களம் இறங்கியுள்ளது. கார் வெடிப்பு சம்பவம் எதிர்பாராமல் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் நாசவேலையா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (UAPA) டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு தற்கொலைப்படை தாக்குதலா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் முழுவதும் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றன. விமான நிலையம், ரெயில் நிலையங்கள் மற்றும் பேருந்து முனையங்களில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.






