ரஷிய எண்ணெய் இறக்குமதி குறித்து டிரம்ப் மீண்டும் பேச்சு: பிரதமர் மோடி பற்றி காங்கிரஸ் கிண்டல்

ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்துவதாக டிரம்ப் 2 முறை கூறியும் பிரதமர் மோடி பதிலளிக்காதது குறித்து காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது
புதுடெல்லி,
ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை எதிர்த்து வரும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்த இறக்குமதியை நிறுத்தப்போவதாக மோடி தெரிவித்ததாக கடந்த வாரம் கூறினார். இதை மத்திய அரசு மறுத்தது.ஆனால் மீண்டும் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதாவது, ‘ரஷியாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது, இந்த விவகாரத்தில் ஏற்கனவே பதற்றத்தை தணித்து பின்வாங்கி வருகிறது’ என மீண்டும் கூறியுள்ளார்.
ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்துவதாக டிரம்ப் 2 முறை கூறியும் பிரதமர் மோடி பதிலளிக்காதது குறித்து காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில், ‘தனது நல்ல நண்பரான இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் என டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். ஆனால் டிரம்ப், ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தினேன் என்று கூறும்போதும், ரஷிய எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தும் என்று கூறும்போதும் அவரது நல்ல நண்பர் (பிரதமர் மோடி) மவுன சாமியாராகி விடுகிறார்’ என கிண்டல் செய்துள்ளார்.






