ஆண்கள் மீது நம்பிக்கை இல்லை: கணவர்களை உதறிவிட்டு 2 பெண்கள் திருமணம்


ஆண்கள் மீது நம்பிக்கை இல்லை: கணவர்களை உதறிவிட்டு 2 பெண்கள் திருமணம்
x
தினத்தந்தி 15 May 2025 4:19 PM IST (Updated: 16 May 2025 12:07 PM IST)
t-max-icont-min-icon

ஒரு கட்டத்தில் எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே சென்று உல்லாசமாக இருந்து வந்தனர்.

பரேலி,

இந்தியாவில் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு இன்னும் சட்டபூர்வமாக அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இருந்தபோதிலும் 2 பெண்கள் ஒருவொருக்கொருவர் திருமணம் செய்துகொள்ளவும், 2 ஆண்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருவதும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இந்தவரிசையில் டெல்லியை சேர்ந்த 2 பெண்களும் தற்போது சேர்ந்துவிட்டனர். டெல்லியில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில் வேலை பார்த்து வருபவர் ஆஷா என்கிற கோலு (27) இவருக்கு புடான் சிவில் லைனில் வசித்து வந்த ஜோதி (29) என்ற பெண்ணுக்கும் இடையே 3 மாதங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஒன்றாக வேலை பார்த்தபோது பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் . ஆனால் சில காரணங்களால் 2 பேரும் கணவரை பிரிந்து வாழ்த்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து சொந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறினார்கள். ஒரு கட்டத்தில் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று உல்லாசமாக இருந்து வந்தனர். இது அவர்களிடத்தில் இருந்த நெருக்கத்தை மேலும் அதிகரித்தது.

ஒருவொருக்கொருவர் அன்பு செலுத்தியதால் மனசுக்குள் ஒரு இனம் புரியாத காதல் பிறந்ததை அவர்கள் உணர்ந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக ஏன்? சேர்ந்து வாழக்கூடாது என முடிவு எடுத்தனர். இது பற்றி அறிந்த 2 பேரின் வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் அவர்கள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தனர். சம்பவத்தன்று ஆஷாவும் ஜோதியும் உத்தர பிரதேசம் மாநிலம் பரேலி மாவட்ட கோர்ட்டு அருகே உள்ள ஒரு கோவிலுக்கு வக்கீலுடன் சென்று மாலை மாற்றாமல் மத சடங்குகள் எதுவும் செய்யாமல் திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பாக ஆஷாவும் ஜோதியும் கூறுகையில்,

நாங்கள் ஒருவொருக்கொருவர் நன்றாக புரிந்து கொண்டதால் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். மற்றவர்கள் என்ன பேசினாலும் எங்களுக்கு அதை பற்றி கவலை இல்லை. நாங்கள் ஆண்கள் மீது நம்பிக்கையை இழந்து விட்டோம். எங்கள் குடும்பத்தினர் எங்கள் திருமணத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி அவர்கள் ஏற்காவிட்டாலும் நாங்கள் டெல்லியில் ஒன்றாக வாழ திட்டமிட்டு இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கணவர்களை உதறவிட்டு 2 பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

1 More update

Next Story