உ.பி: பைக் மீது லாரி மோதி விபத்து - பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி

பைக்கில் சென்ற 3 பேரும் ஹெல்மெட் அணியவில்லை.
லக்னோ,
உத்தரபிரதேசத்தின் காசியாபாத் மாவட்டம் பஜ்பூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் இம்ரான் (வயது 13), வாசீம் (வயது 16), சமத் (வயது 14). சிறுவர்கள் 3 பேரும் நேற்று மாலை பைக்கில் சென்றுள்ளனர்.
சைதுபூர் கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்ப சிறுவர்கள் பைக்கில் சாலையை கடக்க முயற்சித்துள்ளனர். அப்போது சாலையில் வேகமாக வந்த லாரி பள்ளி மாணவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்ட அப்பகுதியினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இம்ரான், வாசீம் ஆகிய 2 சிறுவர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சிறுவன் சமத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பைக்கில் சென்ற சிறுவர்கள் 3 பேரும் ஹெல்மெட் அணியவில்லை. இந்த விபத்து தொடர்பாக உயிரிழந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர் போலீசில் புகார் அளிக்கவில்லை. புகார் அளிக்கப்பட்டால் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.






